இது மிகப்பெரும் அநியாயம் - அஸ்வினுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் வீரர்கள், ரசிகர்கள்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கேப்டன் விராட் கோலியை கடுமையாக சாடியுள்ளனர்.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ள நிலையில் 4வது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் கடந்த 3 போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டிருந்த ரவிச்சந்திர அஸ்வின்4வது போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியோ உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூரை ஆடும் லெவனில் தேர்வு செய்து அஸ்வினை மீண்டும் புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளித்தது.
இதனால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர். விராட் கோலி வேண்டுமென்ற அணியில் அரசியல் செய்து வருகிறார் என்றும் ,அவரை உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
இதேபோல் முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கேல் வாகன் இந்திய அணியின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் அஸ்வின் புறக்கணிக்கப்படுவது தான் நாம் பார்த்ததில் மிகப்பெரும் புறக்கணிப்பு. 413 விக்கெட்டுகளும், 5 சதங்களும் அடித்துள்ள ஒருவருக்கு 4 போட்டியிலும் விளையாட வாய்ப்பு இல்லை, முட்டாள்தனம் என்று அவர் தெரிவித்துள்ளார்.