எங்களுக்கு ஊடகங்கள் மீது பெரிய மரியாதை இருக்கு: எச்.ராஜா கருத்துக்கு அண்ணாமலை விளக்கம்
ஊடகத்தினர் மீது பாஜகவுக்கு பெரும் மரியாதை உண்டு என எச் ராஜா விமர்சனம் செய்துள்ளது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் ருத்ரதாண்டவம் படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, ஊடகவியலாளர்களை மிகவும் அவதூறு வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
இதற்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைமை, எச் ராஜாவை கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் எச் ராஜாவின் விமர்சனம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் :
ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு,நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி, மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகமும் பத்திரிக்கைகளும் திகழ்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது அந்த அக்கறையும் ஆதரவும் பாரதிய ஜனதா கட்சிக்கு தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது என அண்ணாமலை தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.
ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு.
— K.Annamalai (@annamalai_k) September 28, 2021
நல்லவற்றை எடுத்துரைத்து
அல்லவற்றை கண்டித்து
சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி,
1/3
இந்த விளக்கத்தில் அண்ணாமலை, எச் ராஜாவை கண்டிக்கவில்லை என அதிருப்தி நிலவுகிறது. நாட்டின் 4 தூண்களாக சட்டம், நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிகைத் துறை ஆகியவை விவரிக்கப்படுகிறது. நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களையும ஜனநாயக ரீதியில் கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பல அவதூறுகளுக்குள்ளாகும் நிலை ஏற்படுவதாக பத்திரிகையாளர்களின் மனக்குமுறலாக இருக்கிறது.
எனினும் தங்கள் உரிமைகளையும் கடமைகளையும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பதும் பத்திரிகையாளர்களின் கருத்தாக உள்ளது.