மூதாட்டி பாலியல் பலாத்காரம் - இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது..!
கோவில்பட்டி அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கீழ ஈரால் ஆர்.சி தெரு புது காலனி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பாப்பா(65).
கடந்த 02.02.2020 அன்று பாப்பா தங்களது நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பருத்தியை எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து காளியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பாப்பாவை தேடிப் பார்த்தபோது கீழ ஈரால் ஜெகன் என்பவரது தோட்டத்தின் அருகே ஓடையில் இருந்த பனைமரத்தின் கீழ் பகுதியில் உடைகள் அவிழ்ந்த நிலையில் ,காயங்களுடன் பாப்பா உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மட்டுமின்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பல்வேறு கோணங்களில் கடந்த 2 ஆண்டுகளாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் குற்றாவளி கிடைக்கவில்லை, மேலும் துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் உத்தரவின் படி விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான எட்டயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் பீர் முகமது, உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் குற்ற பின்னனி கொண்ட பழைய குற்றாவளிகள் புகைப்படங்களை சேகரித்து, அதனை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் என்பவர் கீழ ஈராலுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளதும், சம்பவதன்றும் கீழஈரால் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றியதும் போலீசார் விசாரணை தெரியவந்துள்ளது.
மாவீரன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையெடுத்து விசாரணை நடத்த போலீசார் மாவீரனை தேடி சென்றபோது, சாயல்குடி காவல் நிலையத்தில் மாவீரன் ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் இருந்ததும், ஜாமீன் கிடைத்தும் வெளியே வராமல் இருப்பது தெரியவந்தது.
இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி நீதிமன்றம் எண் 2ல் மாவீரனை காவலில் எடுத்து விசாரிக்க எட்டயபுரம் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து போலீசார் கடந்த 20ம் தேதி மாவீரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி பாப்பாவை கொலை செய்ததை மாவீரன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
மாவீரன் வழக்கமாக சாயல்குடியில் இருந்து வேம்பார், குளத்தூர், விளாத்திகுளம், கீழஈரால், எட்டயபுரம் பகுதி மற்றும் ஈசிஆர் சாலையில் பைக்கில் சுற்றுவதும், தனியாக யார் வந்தாலும் அவர்களை வழிமறித்து பணம், நகை மற்றும் பொருள்களை பறித்து செல்வதை தொழிலாளாக வைத்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று மாவீரன் அப்பகுதியில் சிறு நீர் கழிக்க நின்று கொண்டிருந்தபோது மூதாட்டி பாப்பா தனியாக செல்வதை பார்த்தாகவும், மேலும் அவரைப் பின்தொடர்ந்து சென்று பனை மரத்தின் கீழே வைத்து அடித்து காயப்படுத்தி மட்டுமின்றி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும்,
பின்னர் பாப்பா காதில் அணிந்திருந்த அரை போன் எடையுள்ள தங்க கமலையும் கொள்ளையடித்து சென்றதாகவும் போலீசார் விசாரணையில் கூறியுள்ளான்.
போலீசார் தன்னை நெருங்கிவிட்டதால் பயந்து போனதால் மாவீரன் ஜாமீன் கிடைத்த போதும் வெளியே வராமல் சிறையில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து போலீசார் மூதாட்டி பாப்பாவை கற்பழித்து கொலை செய்த வழக்கில் மாவீரனை கைது செய்து கோவில்பட்டி நீதிமன்ற எண் 2ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாவீரன் பயன்படுத்திய பைக்கினையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் இருந்த நிலையில் போலீசார் சிறப்பாக விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடித்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.