பூட்டப்பட்ட வீட்டில் தாத்தா,பாட்டி எரித்துக் கொலை - பேரனிடம் தீவிர விசாரணை
ஆத்தூர் அருகே பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் தாத்தா, பாட்டி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் பேரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கொத்தாம்பாடி பாரதியார் நகரில் வசித்து வருபவர் காட்டுராஜா(72), காசியம்மாள்(70). இவர்கள் தங்களது கூரை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
திங்கள்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ஆனால் தீயில் பலத்த காயமடைந்து காட்டுராஜாவும், மனைவி காசியம்மாளும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் எம்.ரஜினிகாந்த் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விசாரணையில் காட்டுராஜாவின் 3வது மகன் குமாரின் மகன் யஸ்வந்த்குமார்(16) என்பவர் வீட்டை பூட்டி தீயை வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.