மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் உலகப் புகழ்பெற்றது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வரலாறு மட்டுமின்றி, தமிழ்மொழி, சங்கம், கலை மற்றும் பண்பாட்டின் தொன்மையான மையமாகத் திகழும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, மகா குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, புனரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
இதனையொட்டி மதுரை மாநகர் விழாக் கோலம் பூண்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் 5 லட்சம் டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கோயில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று (செப். 16) காலை 6 மணிக்குள் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லெட்சுமி, பத்ரகாளி, 63 நாயன்மார்கள் மற்றும் கொடி மரங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கை முன்னிட்டு கோயிலில் உள்ள 4 கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்களுக்கும் நிலை மாலைகள் சாற்றப்பட்டன.