வேட்டி கட்டிய விவசாயிக்கு அனுமதி மறுப்பு - பிரபல ஷாப்பிங் மாலை மூட அரசு உத்தரவு

Karnataka Bengaluru
By Karthikraja Jul 18, 2024 01:31 PM GMT
Report

வேட்டி கட்டி சென்ற விவசாயிக்கு அனுமதி மறுத்த வணிக வளாகத்தை ஒரு வாரம் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜிடி மால் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை (16.07.2024) ஹாவேரி மாவட்டம் அரேமல்லபூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஃபக்கீரப்பாவும், அவரது மகன் நகராஜும் படம் பார்க்கச் சென்றனர்.அதற்காக டிக்கெட் முன்பதிவும் செய்திருந்தனர். 

bengaluru gt mall

அப்பொழுது விவசாயி வெள்ளை வேஷ்டி, தலையில் முண்டு கட்டி என பாரம்பரிய உடை அணிந்து இருந்தார். வணிக வளாகத்துக்குள் நுழைய முயன்ற அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்தி நிறுத்தி, இந்த உடை அணிந்து உள்ளே செல்ல அனுமதியில்லை என கூறி வெளியறே கூறினார்.

போராட்டம்

கிராமத்தில் இருந்து வெகு தூரம் பயணித்து பெங்களூர் வந்துள்ளோம். ஆடையை மாற்ற முடியாது என அவரும், அவரும் மகனும் பாதுகாவலர்களிடம் விளக்கியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்று அவர்கள் வணிக வளாகத்தை விட்டு வெளியேறினர். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கன்னட அமைப்பினரும், விவசாய அமைப்புகளும் வேட்டி கட்டி வணிக வளாகத்துக்குள் நுழையும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விவசாயி பகீரப்பா, "கிராமத்திலிருந்து வேட்டி கட்டி கொண்டு வருபவர்கள், படம் பார்ப்பதற்காக திரும்பவும் ஊருக்குச் சென்று பேன்ட் அணிந்து கொண்டு வர முடியுமா?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வழக்கு பதிவு

இது குறித்து கர்நாடக பாஜகவின் செய்திதொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடக காங்கிரஸ் விவசாயிகளுக்கு எதிரானது” என்று கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரம் குறித்து பேசிய கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட், "வேட்டி அணிந்து வந்த விவசாயியை மாலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.  

 gt mall farmer protest

தற்போது அந்த வணிக வளாக உரிமையாளர் மற்றும் பாதுகாவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் ஒரு வாரத்துக்கு வணிக வளாகத்தை மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, விவசாயி மற்றும் அவரின் மகனிடம் பாதுகாவலர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.