அழுகிய முட்டை விவகாரம்..அரசுப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட் - ஆட்சியர் அதிரடி

Karur Rotten egg Govt School
By Thahir Oct 30, 2021 03:20 AM GMT
Report

அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்த விவகாரம் சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொண்டமாங்கிணம் ஊராட்சி கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக முட்டைகள் வந்துள்ளன.

இவற்றில் பல முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தன. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேற்று புகாருக்குள்ளான கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து,

குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகளை முறையாக பராமரிக்காமல் கவனக்குறைவாக செயல்பட்டதாக பள்ளி சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடமும் உரிய விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், அழுகிய முட்டைகளை பள்ளிகளுக்கு விநியோகம் செய்த விநியோகிஸ்தரை கருப்பு பட்டியலில் சேர்க்க ஆட்சியர் பிரபு சங்கர் பரிந்து செய்துள்ளார்.