நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் அனைத்து வசதிகளும் ‘கட்’ - சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்ஷேனா தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், "ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி, ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்குக் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், சித்தாலபாக்கம் ஏரியைப் பொறுத்தவரைச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த கூட்டத்தில், நீர் நிலைகளின் எல்லைகள் குறித்து சென்னை முழுவதும், ஜிபிஎஸ் (GPS) கருவி மூலம் வரைபடம் தயாரிக்கப்பட்டு, உள்ளூர் அளவில், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறை அதிகாரி, நலச் சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் எனக் குழு அமைத்து மாதம்தோறும் கண்காணித்து அறிக்கை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளைக் கண்டறிய ஜிபிஎஸ் கருவி பொருத்தி முன்னோடி திட்டமாக சிட்லபாக்கம் ஏரியில் முதல் கட்டமாக அமல்படுத்த உள்ளோம். மேலும், நீர் நிலைகளை மீட்டு அதைப் பாதுகாப்பது தொடர்பாகக் கொள்கை முடிவு எடுக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நீர் நிலை ஆக்கிரமித்துக் குடியிருந்தவர்களுக்கு மறு குடியமர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடந்த மாதம் தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.