இந்தியர்கள் யாரும் அங்கே செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியர்கள் யாரும் வங்கதேசம் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெடிக்கும் போராட்டம்
வங்காளதேசம், சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், 30 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று கூறி உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளன. தொடரும் வன்முறையில் இதுவரை குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, 30 சதவீத இட ஒதுக்கீட்டை, 25 சதவீதமாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
இதனால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் வங்கதேசம் செல்ல வேண்டாம். ஏற்கெனவே வங்கதேசத்தில் இருப்போர் அதீத எச்சரிக்கையுடன் இருக்கவும். தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.