விபத்தில் சிக்கியவர்களை மீட்டால் ரூ.5,000 பரிசு - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
சாலை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் உயிரைக் காப்பாற்றிய மிகவும் தகுதியான 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குத் தேசிய அளவிலான விருதும், ஒரு லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு 'கோல்டன் ஹவர்' எனப்படும் குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவ பொதுமக்களுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் மூலம் ஊக்குவிக்கவேண்டிய தேவை உள்ளது என உணரப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த திட்டம் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.