இந்த பாஸ் வாங்கினால் போதும் - டோல் கேட்டில் 15 ஆண்டுகளுக்கு கட்டணம் இல்லை
சுங்கச்சாவடிகளில் வருடாந்திர மற்றும் வாழ்நாள் பாஸ் முறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுங்க கட்டணம்
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் அரசு சுங்க கட்டணம் வசூலிக்கிறது. தற்போது FASTag மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு வருடாந்திர பாஸ் மற்றும் வாழ்நாள் பாஸ் கொண்டுவர நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
வாழ்நாள் பாஸ்
இதன்மூலம் வாகன ஓட்டிகள் குறைந்த அளவிலான கட்டணங்களையே செலுத்துவார்கள் என கூறப்படுகிறது. இனி 3000 ரூபாய்க்கு வருடாந்திர பாஸ் அல்லது 30,000 ரூபாய்க்கு வாழ்நாள் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த பாஸ் இருந்தால் நாட்டின் எந்த டோல்கேட் வழியாகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி பயணம் செய்து கொள்ளலாம். ஆனால் இது வணிக பயன்பாடு அல்லாத வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தற்போது டோல்கேட் அமைந்துள்ள மாவட்ட வாகன பதிவெண் கொண்டவர்களுக்கு மட்டும் மாதாந்திர பாஸ் ரூ.340 மற்றும் வருடாந்திர பாஸ் ரூ.4080 க்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதாந்திர பாஸ் ஆனது டோல்கேட் அமைந்துள்ள பகுதியில் இருந்து 20 கி.மீ சுற்றளவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
செயற்கைகோள் கண்காணிப்பு
மேலும் சமீபத்தில் நடத்திய ஆய்வில் 2018-19 ஆம் ஆண்டில், சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடமாக இருந்தது, FASTags அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் 47 வினாடிகளாகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் செயற்கைகோள் கண்காணிப்புடன் பயண தூரத்துக்கு ஏற்ப சுங்க கட்டணம் வசூலிக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு வருகிறது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் அதன் பிறகு சுங்கச்சாவடிகளுக்கு வேலை இருக்காது.
ஒவ்வொரு ஆண்டும் டோல்பிளாசா மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்து வருகிறது. கடந்த 2023-24 ஆம் ஆண்டில் ரூ.64,809.86 கோடி சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.