பாலியல் வழக்கில் சிக்கிய 255 ஆசிரியர்கள் - தமிழக பள்ளி கல்வித்துறை முக்கிய முடிவு
பாலியல் வழக்கில் சிக்கிய 255 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிகளில் பாலியல் தொல்லை
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களை தடுக்கும் நோக்கில் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கான தண்டனையை அதிகரித்து தமிழக அரசு சட்டதிருத்தம் செய்தது.
சமீபகாலமாக, தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை அளித்த சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கல்வி சான்றிதழ்கள் ரத்து
சில நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியில் 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியே பள்ளிகளில் நடைபெறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்ற புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் சமந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்வது, பணி நீக்கம் அல்லது கட்டாய பணி ஓய்வு அளிப்பது போன்ற அம்சங்கள் 2012 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அரசாணை முழுமையான செயல்பாட்டில் இல்லை.
255 ஆசிரியர்கள்
தற்போது ஆசிரியர்கள் மீதான பாலியல் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க இந்த அரசாணையை மீண்டும் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களிடம் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆசிரியர்கள் மீதான புகார், அதன் உண்மைத்தன்மை, அதன் மீதான நடவடிக்கை, நிலுவையில் உள்ள வழக்குகள், பணியில் இருப்பவர்கள், ஒய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட தகவல்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த அறிக்கையின்படி, தொடக்கக் கல்வித் துறையில் 80 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித் துறையில் 175 ஆசிரியர்கள் என மொத்தம் 255 ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் உள்ளது. இது தொடர்பாக நாளை பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆய்வு செய்ய உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள்ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.