பெங்களூரில் Ola,Uber மற்றும் Rapido சேவைகளை நிறுத்த அரசு உத்தரவு
பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோக்கள் சட்டவிரோதம் என கூறி இந்த சேவைகளை அடுத்த 3 தினங்களுக்குள் ஆட்டோ சேவைகளை நிறுத்திக் கொள்ள உத்தரவு.
அரசு அதிரடி உத்தரவு
பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோ சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, கர்நாடகாவில் ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆட்டோ நிறுவனங்களை நடத்திவரும் ஏ.என்.ஐ டெக்னாலஜீ மூன்று நாட்களில் தனது சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனங்களுக்கு மாநில போக்குவரத்து துறை அனுப்பியுள்ள நோட்டீஸில், ஓலா, உபேர், ரெபிடோ ஆட்டோ உள்ளிட்ட ஆப் அடிப்படையிலான கேப் மற்றும் பைக் ஒருங்கிணைப்பாளர்கள் கர்நாடகா மாநில அரசாங்கத்தால் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு, அடுத்த மூன்று நாட்களுக்கு கர்நாடகாவில் தங்கள் ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக இந்த நிறுவனங்கள் மீது புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக 2 கிலோமீட்டர் மட்டுமே தொலைவு கொண்ட பயணத்திற்கு 100 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாகப் புகார் அளித்துள்ளனர்.
ஆட்டோ சேவையை நிறுத்துவதுடன் டாக்ஸி உள்ளிட்ட சேவைகளுக்கு அரசு நிர்ணயித்ததை விட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட கூடாது எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது
. மேலும் ஓலா, உபேர் மற்றும் ரேபிடோ நிறுவனங்களுக்கு டாக்சி சேவை மட்டுமே அளிக்க அனுமதி உண்டு ஆட்டோ சேவை அளிக்க அனுமதி இல்லை என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.