வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
வன்னியர், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம், சீர்மரபினருக்கு 7 சதவிகிதம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு என குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இந்த சிறப்பு ஒதுக்கீடு செயல்படுத்தப்படும்.
வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சேர்க்கையில் இந்த சிறப்பு ஒதுக்கீடு கொடுக்கப்படுவதாகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்தபடி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சட்ட வல்லுநர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடும், சீர்மரபினருக்கு 7 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) July 26, 2021
அனைத்து கல்விச் சேர்க்கைகளும் புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும். pic.twitter.com/Zj79u7EbHu
நடப்பாண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி மாணவர் சேர்க்கையானது மேற்கூறிய சிறப்பு ஒதுக்கீடு முறையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.