குடியிருப்பில் பேய் பீதியால் அஞ்சி நடுங்கும் அரசு அதிகாரிகள் - 11 ஆண்டுகளாக குடியேற மறுப்பு..!
திருவண்ணாமலையில் அரசு குடியிருப்பில் 11 ஆண்டுகளாக பேய் நடமாட்டம் இருப்பதாக கூறி அதிகாரிகள் குடியேற மறுத்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேய் உலா வருவதாக பீதி
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என இருட்டை பார்த்து பயப்படுவர்களும் இன்றளவும் இருந்து வருகின்றனர்.
பொதுவாக ஒரு வாடகை வீட்டில் குடியேறுகின்றோம் என்றால் அந்த வீட்டில் இளம் வயதில் யாரும் உயிரிழந்துள்ளனரா? யாரும் தற்கொலை செய்து கொண்டனரா? என கேட்ட பின் தான் அந்த வீட்டை தேர்வு செய்கின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் பேய் இருப்பதாக கூறி அரசு குடியிருப்பில் அதிகாரிகள் தங்காமல் புறக்கணித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு கலசபாக்கத்தை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகா அறிவிக்கப்பட்டது. கலசப்பாக்கம் சந்தைமேடு பகுதியில் செய்யாற்றின் கரையோரம் புதியதாக அலுவலகம் தாசில்தார் குடியிருப்பு கட்டப்பட்டது.
கடந்த 11 ஆண்டுகளில் தற்போது வரை 14 தாசில்தார்கள் பணியாற்றியுள்ளனர். இது வரை பணியாற்றி எந்தவொரு தாசில்தாரும் குடியிருப்பில் வசிக்கவில்லை.
இதற்கு காரணம் அந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அமானுஷ்ய உருவங்கள், பேய்கள் நடமாடுவதாக வதந்தி பரவியது.
இதனால் இந்த குடியிருப்பில் எந்த ஒரு அதிகாரியும் இதுவரை குடும்பத்துடன் குடியேறவில்லை என கூறுகின்றனர்.
அம்மாவாசை அன்று குடியிருப்பில் பேய் நடமாட்டம்
இது குறித்து அப்பகுதி மக்கள் பேசுகையில், 11 ஆண்டுகளாக யாரும் இந்த குடியிருப்பில் தங்குவதில்லை. இந்த குடியிருப்பு பகுதி அருகே குறிப்பாக அமாவாசை நாட்களில் அமானுஷ்யமான உருவம் மற்றும் பேய்கள் உலா வருவதாக கூறுகின்றனர்.
குடியிருப்பு பகுதியின் அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு ஒன்று இருப்பதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
சுடுகாட்டில் இருந்து இந்த குடியிருப்பு வரை அமாவாசை நாட்களில் பேய் உலவி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் இங்கு நாங்கள் யாரும் செல்வதில்லை என்று தெரிவிக்கின்றனர்.