பாலியல் ரீதியாக சீண்டிய அதிகாரி - சேற்றை அள்ளி முகத்தில் வீசிய பெண்
பணியிடத்தில் துன்புறுத்திய அறநிலையத்துறை துணை ஆணையர் மீது சேற்றை வீசிய உதவி பெண் ஆணையர் செயல் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலக துணை ஆணையராக புஷ்பரவரதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் உதவி துணை ஆணையராக சாந்தி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு புஷ்பவரதன் தன் அறையில் மூன்று அதிகாரிகளுடன் அலுவல் ரீதியான ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தார்.
அப்போது அந்த அறைக்குள் வந்த உதவி கமிஷனர் சாந்தி கையில் கொண்டு வந்திருந்த சேற்றை புஷ்பவரதன் முகத்தில் வீசினார். இந்த காட்சி அந்த அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த சம்பவத்திற்கு காரணம் கடந்த சில வாரங்களாக புஷ்பவரதன் தன்னையும் மற்ற அதிகாரிகளையும் மனரீதியாக துன்புறுத்துவதாகவும், தனிப்பட்ட கோபத்தின் காரணமாக அதிகாரிகளை பழிவாங்குவதாகவும், பணியிடமாற்றம் செய்வதாகவும், விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் கூறி மிரட்டுவதாக சாந்தி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதனை மறுத்துள்ள புஷ்பவரதன் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், ஜூலை 14 முதல் நான் விசாகப்பட்டினத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நான் யாரிடமும் பேசுவதற்கு கூட வாய்ப்பில்லை. வியாழக்கிழமை தான் அலுவலகத்திற்கு வந்தேன்.
இன்று சாந்தி என் அலுவலகத்திற்குள் நுழைந்த சில நொடிகளில் என் மீது மணலை வீசிவிட்டு அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னைத் திட்டினார். இது தொடர்பாக சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை கமிஷனரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.