மாசத்துக்கு 58 ஆயிரம் வரை சம்பளம் - திருத்தணி கோவில் அரசு வேலை - வெளியான அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோவிலில் மாதம் 18 ஆயிரம் முதல் 58 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை இருப்பதாக தமிழக அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருத்தணி கோவில்
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருத்தணி கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் கலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
பணிக்கான முழு விவரம்
திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஓதுவார் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் தேவாரப்பாடசாலையில் தொடர்புடைய துறையில் 3 ஆண்டு படிப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் பரிச்சாரகர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் கோவிலில் நடைபெறும் பூஜை முறைகள், நைவேத்தியம் தயாரிக்க வேண்டும். மேலும் வேதபாராயணம் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் 3 ஆண்டு படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அர்ச்சகர் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆகமப்பள்ளி, வேதபாடசாலையில் ஓராண்டு படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வாகும் நபர்கள் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், சந்தானவேணுகோபாலபுரம், கரிம்பேடு நாதாதீஸ்வரசாமி கோவில், ஆற்காடு குப்பம் சோளீஸ்வரசாமி கோவில்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இவற்றில், ஓதுவார் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரையும், பரிச்சாரகர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேவபாராயணம் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரையும், அர்ச்சகர் பணிக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.