வருகிறது PAN 2.0 - பழைய பான் கார்டுகள் செல்லாதா? மத்திய அரசு விளக்கம்
பான்2.0 என்ற திட்டம் மூலம் புதிய பான் கார்டு வழங்கப்பட உள்ளது.
பான் கார்டு
ரேஷன் கார்டு போல பான் கார்டும்(PAN Card) இந்திய குடிமக்களின் தவிர்க்க முடியாத ஆவணமாக மாறி விட்டது. இந்தியாவில் 74.67 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் பண பரிவர்த்தனை, வங்கி கணக்கு தொடங்க, வங்கி கடன் ஆகியவற்றிற்கு பான் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பான் 2.0
இந்நிலையில் திட்டங்களின் செயல்திறனை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. தற்போது, பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.1,435 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பான் அட்டையில், எண் மற்றும் எழுத்தில் 10 இலக்க அடையாள குறியீடு இருக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள அட்டையில் கியூஆர் கோடாக மாற்றப்பட உள்ளது. மேலும், பான் 2.0 படி, அரசு டிஜிட்டல் சேவைத் துறையில் பான், டான் (TAN -Tax deduction and collection account number) எண் ஒன்றிணைத்து, பொது அடையாள எண்ணாக பான் எண் பயன்படுத்தப்படும்.
இலவசம்
இந்த பான் 2.0 திட்டம் மூலம் வரி செலுத்துபவர்களுக்கு டிஜிட்டல் சேவை மேம்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு அதிகரிக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும், "இந்த பான் 2.0 திட்டம் முழுவதும் ஆன்லைன் மூலம் பிரத்யேக இணையத்தளம் வாயிலாக செயல்படுத்தப்படும். புதிய பான் அட்டை வருவதால் பழைய பான் கார்டு செல்லுமா செல்லாத என சந்தேகம் வேண்டாம். பான் எண் மாறாததால் அந்த சிக்கல் இல்லை. புதிய பான் கார்டு பெற எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவை இல்லை" என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.