அரசு மருத்துவரின் அத்துமீறல்.. கடிவாளம் போட்ட செவிலியர்கள்

1 month ago

மங்களூருவில் அரசு வென்லாக் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் உடன் பணியாற்றி வந்த செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி, சுற்றுலாவிற்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்த போட்டோ, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூரு வென்லாக் அரசு மருத்துவமனையில் குஸ்டரோகி நோயாளிகள் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வரும் ரத்னாகர்  என்பவர்  சிறப்பு நோடல் அதிகாரியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் இவருக்கு மருத்துவமனையில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இதை ரத்னாகர் தவறாக பயன்படுத்த தொடங்கினார்.

குறிப்பாக தன்னுடன் பணியாற்று பெண் ஊழியர்கள், செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டு வந்துள்ளார். அவரது ஆசைக்கு உடன்படாத ஊழியர்களுக்கு பணி சுமையை அதிகரிப்பது, பாலியல் தொல்லை கொடுப்பது என்று பல்வேறு தொந்தரவுகளை வழங்கி வந்துள்ளார்.

இதில் இவருக்கு அடிமையாகும் பெண்களை, மருத்துவமனையில் அனைவரின் கண்முன்னே கட்டி பிடித்து நடனம் ஆடுவது,உள்பட பல்வேறு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சில நேரங்களில் அந்த பெண் ஊழியர்களை வெளியே அழைத்து சென்று, ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதுதொடர்பான சில வீடியோக்கள்,போட்டோக்களை அவரே தனது செல்போன் வாயிலாக ஊழியர்களுக்கு பரிமாற்றம் செய்துள்ளார். தங்களுக்கு விடிவு காலம் கிடைக்காதா என்று ஏங்கி வந்த நிலையில் மற்ற பெண் ஊழியர்களிடம் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை கூற தொடங்கினர்.

அவர்கள் இதை மருத்துவமனையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றனர். முறையான ஆதாரங்கள் தேவை என்றதால் பெண்கள்,தங்கள் செல்போனில்களிலேயே அவரது சில்மிஷத்தை படம் பிடித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றதும் , பெண் ஊழியர்கள் மிகவும் மன வருத்தம் அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரத்னாகரின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க முன் வந்தனர். அதன்படி நேற்று வென்லாக் மருத்துவமனை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரா மருத்துவனை டீனிற்கு இது குறித்து புகார் அளித்துள்ளார். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

முதற்கட்டமாக அவரை சஸ்பெண்ட் செய்துவிட்டு, பின்னர் துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க டீன் முடிவு செய்திருந்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து, டீன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவர் கே.ஏ.டிக்கு சென்று அந்த சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை வாங்கி மீண்டும் தனது பாலியல் தொல்லையை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர் குறித்து செவிலியர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு துறையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் பெண்களுக்கு வெளிப்படையாக பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்