தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு?.. இன்னும் 12 வாரம், மாற்றம் வரும் - அரசு தகவல்!
ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு
பெட்ரோல், டீசல் விலை ஏற குறைய உள்ளதால், அந்த விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க உத்தரவிடக் கோரி ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மாற்றம் வரும்
இந்நிலையில், தமிழ்நாடு அரசு, மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டண விகிதத்தையும் கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்படும் என்று கூறியது. மேலும், இதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், தற்போது அந்த பரிந்துரைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
போக்குவரத்துத்துறை இணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணத்தை மாற்றியமைக்கும் குழுவில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர், நுகர்வோர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது, அதன் அடிப்படையில் இன்னும் 12 வாரங்களில் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.