தமிழ்நாடு, திராவிட மாடல் என்ற வார்த்தையை புறக்கணித்த ஆளுநர் - கட்சியினர் எதிர்ப்பு
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ரவி திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்துள்ளார்.
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் வணக்கம் எனக் கூறி தனது உரையை தமிழில் தொடங்கினார்.
அப்போது சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு வாழ்கவே என கோஷம் எழுப்பினர்.
அதை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மதிமுக.விசிக, பாமக உள்ளிட்ட கட்சியினை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதை தொடர்ந்து ஆளுநர் தனது உரையை தொடர்ந்து பேசி வந்தார். அப்போது பல திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
அவரின் உரை பின்வருமாறு
நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது.
தொழிற்துறையின் தற்கால தேவைக்கேற்ப ஐடிஐ-களில் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளை போல தமிழகத்திலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தனது உரையில் குறிப்பிட்டார். பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.15,000 கோடி செலவில் குடிநீர் வினியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்க ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடி அருங்காட்சிகம் போன்று பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று பேசினார்.
புறக்கணித்த ஆளுநர்
இந்த நிலையில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் போன்ற வார்த்தையை அவர் தவிர்த்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் செல்வ பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு தயாரித்த உரையை அப்படியே வாசிப்பது தான் மரபு, இந்த நிலையில் தமிழகம் இப்படியொரு ஆளுநரை பார்த்ததில்லை இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பெரியார் , அம்பேத்கர், அண்ணா ஆகியோரது பெயர்களையும் ஆளுநர் புறக்கணித்ததாக கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.