கல்வியில் அரசியலைப் புகுத்த வேண்டுமென ஆளுநர் விரும்புகிறார் - அமைச்சர் பொன்முடி
மத்திய அமைச்சர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டுமென ஆளுநர் நினைக்கிறார். அதனால் பட்டமளிப்பு விழாவை நடத்த முடியவில்லை என துணைவேந்தர்களே புகார் தெரிவிக்கிறார்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘’ இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு 1.87 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 18 ஆயிரம் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 7 ஆயிரத்திற்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசின் சலுகையால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பாடத்திட்டம் மேம்படுத்தப்படும். ஜுலை 2-ம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
பட்டமளிப்பு விழாவில் மாநிலங்களை சேர்ந்தவர்களைத் தான் சிறப்பு விருந்தினராக அழைப்போம். ஆனால் ஆளுநர் மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டுமென விரும்புகிறார்.
அவர்கள் தேதி கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவர்கள் மாணவர்கள் தான். இங்கு இருக்கக் கூடிய அமைச்சர்களை வைத்துக் கூட பட்டமளிப்பு விழாவை நடத்தினால் அதில் தவறு இருக்க முடியாது.
9 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் காத்திருப்பு
கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் காத்திருக்கின்றனர். இதனால் வெளி நாடுகளுக்கு சென்று மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் ஆலோசனைகளை ஆளுநர் கேட்பது இல்லை.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு செய்ய 2022-ம் ஆண்டு அக்டோபரிலேயே குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், ஒப்புதல் அளிக்காமலேயே ஆளுநர் இருக்கிறார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய மூவர் குழுவை கடந்தாண்டு அக்டோபரிலேயே அரசு அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. சார்பில் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என ஆளுநர் நிர்ப்பந்திக்கிறார். அப்படி ஒரு விதியே இல்லை. சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட விரும்புகிறாரா? என்பது தெரியவில்லை.
கல்வியில் அரசியலைப் புகுத்த வேண்டுமென ஆளுநர் விரும்புகிறார். அதற்கேற்பதான் அவருடைய செயல்பாடுகள் இருக்கின்றன. உயர்கல்வியின் பொற்காலமாக தற்போது தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது ஆளுநருக்கு புரியவில்லை’’ என்றார்.