ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் அனுமதி - அமைச்சர் ரகுபதி தகவல்
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் அனுமதி அளிப்பார் என அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா
கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி ஆன்லைன் சட்டத்தை தடை விதிக்கும் அவசர தடை சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இதற்கு ஆளுநர் எந்த ஒப்புதலும் அளிக்காத நிலையில், பல்வேறு தரப்பினருக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த தடை மசோதா தொடர்பாக ஆளுநர் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாிநல அரசுக்கு உள்ளதா? இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் ஆளுநர் கேட்டிருந்ததாக தகவல் வெளியானது.
ஆளுநருடன் அமைச்சர் சந்திப்பு
ஆளுநரின் கடிதத்திற்கு தமிழக அரசு பதில் கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆளுநரை நேரில் சென்று சந்தித்தார்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஆளுநருக்கு நேரில் விளக்கம் அளித்தோம்.
ஆளுநர் சில சந்தேகங்களை கேட்டறிந்தார். அதற்கு பதிலளித்தோம். ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும், விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக கூறினார்.