ஆளுநர் உரை புறக்கணிப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் பதில்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று கலைவானர் அரங்கில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனை திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
“முதல்வர், துணை முதல்வர் ஊழலுக்கு கவர்னர் பக்கபலமாக உள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் பயன்பெற்றுள்ளது என கவர்னர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அது தமிழக மக்களுக்கு மத்திய அரசு அளித்த லாலிபாப் எனக்கூறியிருந்தேன். 2015ம் ஆண்டு, மத்திய பட்ஜெட்டில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 2019ல், மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆனால், 2021 ம் ஆண்டு ஆகியும் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கப்படவில்லை. இதனால், தான் மத்திய பட்ஜெட் மூலம் தமிழக மக்களுக்கு அளித்த லாலிபாப் என விமர்சனம் செய்தேன். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளனர்.
கவர்னர் பேசும் போது, அமருங்கள் இது கடைசி பட்ஜெட் என தெரிவித்தார். இது தான் உண்மை.அதனை வரவேற்கிறோம். அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இதுதான். கடந்த டிச,22 கவர்னரிடம், அதிமுக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தோம்.
நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர், அமைச்சர்களுக்கு பக்கபலமாக, ஊழலுக்கு கவர்னர் துணை நிற்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை என்பது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் கவர்னர் முடிவு எடுக்கவில்லை.
இதனால் தான் கவர்னர் உரையை புறக்கணித்தோம். கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் ஊழல் தாண்டவமாடுகிறது. முதல்வர், துணை முதல்வர் கொள்ளையடித்த பணத்தின் மூலம் ஒராண்டு பட்ஜெட் போட முடியும்.
மக்கள் மன்றத்திற்கு சென்றோம். அங்கு ஆதாரங்களுடன் ஊழல் புகார் குறித்து எடுத்து கூற கடமைப்பட்டுள்ளோம். இங்கிருந்து பேசுவது பயன் கிடையாது. பேச அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.