சட்டப்பேரவை கூட்டத்தொடர்; ஆளுநர் பாதியிலேயே வெளியேறியது நாட்டை அவமதிப்பது போன்றது - சபாநாயகர்
தேசிய கீதம் முடியும் வரை ஆளுநர் இருந்திருந்தால் மகிழ்ச்சி, ஆனால் அவர் வெளியேறியது நாட்டை அவமதிப்பது போன்றது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரை வருந்தத்தக்கது முதலமைச்சர்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் ஆளுநர் பேச ஆரம்பித்த போது திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ஆளுநர் தனது உரையை பேசினார்.ஆனால் உரையில் அச்சிடப்பட்டிருந்த அண்ணா, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர் மற்றும் திராவிட மாடல் என்ற வார்த்தையையும் அவர் புறக்கணித்திருந்தார்.
இதற்கு பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எழுந்து அரசு தயாரித்த ஆளுநர் உரையின் பகுதியை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் அப்பாவுக்கு கோரிக்கை வைத்தார்.
இதை தொடர்ந்து ஆளுநர் தாமாக முன்வந்து பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் பதிவேற்றக்கூடாது என முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் பாதியிலேயே வெளியேறியது வருத்தம் அளிக்கிறது சபாநாயகர்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு ஜனவரி 13 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவித்தார்.
மேலும் ஆளுநரின் உரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு ஆளுநர் பேரவையை விட்டு வெளியேறிது வருத்தம் அளிக்கிறது என்றார்.
தேசிய கீதம் முடியும் வரை ஆளுநர் இருந்திருந்தால் மகிழ்ச்சி, ஆனால் அவர் வெளியேறியது நாட்டை அவமதிப்பது போன்றது என்றார்.
தேசிய கீதம் இசைத்த பின்பு ஆளுநர் புறப்படுவதே மரபு என சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், மத்திய அரசு தயாரித்த உரையை தான் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் வாசிக்கிறார் என்றார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வேறு உயர் பதவிக்காக இதுபோன்று செயல்படுகிறாரோ என சந்தேகம் எழுகிறது என்று சபாநாயகர் விமர்சித்தார்.
அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஆளுநர், அதனை மீறும் வகையில் நடந்து கொண்டுள்ளார் என்றார். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை கூட ஆளுநர் உச்சரிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் வேறுபட்டு செயல்படுவதற்கான நோக்கம் தெரியவில்லை.