கலாசாரத்தின் அடையாளமே ராமாயணம்தான்; அதுதான் தர்மம் - ஆர்.என்.ரவி பேச்சு
கலாசாரத்தின் அடையாளமான ராமாயணத்தை போற்றி பாதுகாக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
தென்னிந்திய பண்பாட்டு மையத்தின் சார்பில் தேரழுந்தூரில் கம்பராமாயண விழா நடந்து வருகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், நான் பள்ளியில் படிக்கும்போது கம்பர் பிறந்த ஊருக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த ஆசை 2-வது முறையாக தற்போது நிறைவேறியுள்ளது. கம்பரின் பங்களிப்பு என்பது ஏதோ ஒரு ராமாயணத்தை எழுதினார், இலக்கியத்தை படைத்தார் என்பது மட்டுமல்ல.
கலாசார அடையாளம்
ராமாயணத்தின் மூலம் பாரத தேசத்தில் வாழும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அவரது பங்களிப்பு உள்ளது. நமது கலாசாரம், பாரம்பரியம், ஆன்மிகம் ஆகியவற்றுக்கு கம்பர் அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. நமது கலாசாரம், பாரம்பரியத்தின் தந்தை கம்பர்.
கம்பராமாயணத்தை தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக கருதுகிறேன். துரதிஷ்டவசமாக நம் கலாசாரத்தை நாம் மறந்து விடுகிறோமோ? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.
கலாசாரத்தின் அடையாளமான ராமாயணத்தை எப்போதும் போற்றி பாதுகாக்க வேண்டும். வாழ்வியல் தர்மங்களாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.