தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
நாடு முழுவதும் நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவை அமைத்து, அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நீட் விலக்கு மசோதா சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் இந்த சிறப்பு மசோதாவை திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அனைத்துக்கட்சி சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்ட இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன்மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தும், தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த 7ஆம் தேதி 3 நாள் பயணமாக டெல்லி சென்ற நிலையில் மீண்டும் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். நீட் விலக்கு கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று மயிலாடுதுறையில் ஆளுநர் ரவி பயணத்தின்போது எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று நிலையில் ஆளுநரின் இந்த திடீர் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம் சமீபத்தில் தமிழ் புத்தாண்டு அன்று தமிழக ஆளுநர் ரவி நடத்திய தேனீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.