ஒரே வாரத்தில் 2வது முறை ஆளுநர் டெல்லி பயணம் - பின்புலம் என்ன?
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநர் டெல்லி செல்வது கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஆளுநர்
தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையின் போது, தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார்.

அந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புகார் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சட்ட அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சமர்ப்பித்தனர். அதில் ஆளுநர் வரம்பை மீறி செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த புகார் கடிதத்தை நடவடிக்கைக்காக உள் துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிவைத்துள்ளார்.
டெல்லி பயணம்
இதனிடையே சில தினங்களுக்கு முன் திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார். தன்னுடைய உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு உடனே சென்னை திரும்பினார். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து இன்று காலை விமானத்தில் டெல்லி சென்றார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் சந்திக்கவுள்ளதாகவும், அப்போது தமிழ்நாட்டு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.