வள்ளுவரின் சிஷ்யன் நான்; திருக்குறள் மொழிபெயர்ப்பு ஒரு தலைபட்சமானது- ஆர்.என்.ரவி!
ஆளுநர் மாளிகை அழைப்பில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையாக உள்ளது.
வள்ளுவரின் சிஷ்யன்
திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் பிறந்ததாக கருதப்படுகிறது. அந்நாள் அனுஷ்டிக்க படும் நிலையில், அவரின் திருநாளை கொண்டாடுவதாக ஆளுநர் மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகையின் திருவள்ளுவர் தின அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இருப்பதற்கு பல தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், விழாவில் டி.கே. ஹரி மற்றும் டி.கே. ஹேமா ஹரி ஆகியோர் எழுதிய "திருவள்ளுவர் - தமிழ்நாட்டின் புரவலர் துறவி" என்ற மின்னணு திருப்பு புத்தகத்தை கவர்னர் ஆர்.என் ரவி வெளியிட்டார்.
ஆர்.என்.ரவி
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் இங்கு கவர்னராக வீற்றிருப்பதைவிட திருவள்ளுவரின் சீடனாக, மாணவனாக அமர்ந்திருப்பதிலேயே பேருவகை கொள்கிறேன். எனது பள்ளி பருவத்தில் திருவள்ளுவர் பற்றி முதன்முதலில் அறிந்தேன். 1964-ம் ஆண்டு ஒரு சரஸ்வதி பூஜை அன்று பள்ளி நூலகத்தில் இந்தி புத்தகம் ஒன்றில்,
பாரதத்தின் தென்கோடியில் ஒரு மகான் இருந்தார். அவர் திருவள்ளுவர் என்று அதில் போடப்பட்டு அவர் எழுதிய குறளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் கவர்னராக பணியாற்றுவதால், திருக்குறளை ஆழமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது. திருக்குறளில் மகத்தான, ஆழமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
திருக்குறள் அறிவார்ந்த, ஆன்மிக மற்றும் சித்தாந்த நோக்கத்துடன் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. சித்தாந்த ரீதியான திருக்குறள் மொழிபெயர்ப்பு, ஒரு தலைபட்சமாக உள்ளது. திருக்குறளை பெரிதும் போற்றும் பிரதமர் மோடி, அதை உலக பொது நூலாக மாற்றும் செயலை நிச்சயம் செய்வார் என்று பேசியுள்ளார்