தமிழ்நாட்டில் அறியப்படாத தியாகிகளை ஆவணப்படுத்துக : ஆளுநர் உத்தரவு

R. N. Ravi
By Irumporai Jan 26, 2023 09:38 AM GMT
Report

வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் உத்தரவு

இந்திய விடுதலைக்காக பாடுபட்டு, ஆனால் முறையான அங்கீகாரம் பெறாமல் போன தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை பல்கலைக்கழகங்கள் அடையாளம் காண முயற்சிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக , தற்போது வரலாற்றில் நினைவுக்கூரப்படாத தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்தும்படி பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

கடிதம்

இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள கடிதத்தில்,நமது தமிழ்நாட்டில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அந்நியரை இம்மண்ணை விட்டு விரட்ட செயற்கரிய தியாகங்களை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அறியப்படாத தியாகிகளை ஆவணப்படுத்துக : ஆளுநர் உத்தரவு | Governor Orders Universities Document

இதில் பலரது தியாகங்கள், பங்களிப்புகள் பொதுவெளியில் அறியப்படாமலேயே மறக்கடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேசம் அதற்காக உழைத்த தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கால தலைமுறை அறிய அவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவது நம் கடமை.

ஆராய்ச்சி மாணவர்கள்

இது சம்பந்தமாக, உங்கள் பல்கலைக்கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த குறைந்தபட்சம் 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவர்களை நீங்கள் நியமிக்க வேண்டும்.

இத்திட்டத்தை முடிக்க ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படலாம், அதன் முடிவில் ராஜ் பவனில் நடைபெறும் விழாவில் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி மாணவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் அறியப்படாத தியாகிகளை ஆவணப்படுத்துக : ஆளுநர் உத்தரவு | Governor Orders Universities Document

இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரர்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலியாகவும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெருமையாகவும் இருக்கும். இந்த ஆராய்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிலை குறித்து அவ்வப்போது தனக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது