தமிழகத்தில் பாஜக வன்முறையை துாண்டுவதற்கு திட்டமிடுகிறது - எம்.பி.திருமாவளவன் குற்றச்சாட்டு..!

Issue BJP Governor Thol.Thirumavalavan
By Thahir Apr 20, 2022 08:11 AM GMT
Report

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழக ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி, திசை திருப்பும் முயற்சி செய்வதாகவும், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த உருவாக்க பார்க்கிறார்கள் என்று தொல் திருமாவளவன் குற்றச்சாட்டினார்.

அனைத்து தரப்பினராலும் பாராட்டக்கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேரூன்ற வேண்டும் என திட்டமிடுகின்றனர். பாஜகவினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்த அதி தீவிர மதவாத சக்திகளை ஆளுநராக நியமித்து வருகின்றனர்.

அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு பாஜக அரசு முயல்கிறது.

அந்த அடிப்படையில்தான் எச்.ராஜா கேரள ஆளுநராக நியமிக்கப்படுவதாக கூறப்பட வேண்டியுள்ளது. தமிழகத்தில் வேண்டுமானால் எச்.ராஜா வாயில் வந்ததை பேசலாம்.

கேரளாவில் படித்தவர்கள் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் அதிகம் உள்ளனர். எனவே அங்கு எடுபடாது. இலங்கைக்கு இந்திய அரசு ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாய் உதவிகளை செய்துள்ளது.

அந்த உதவிகள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.