தமிழ்நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை - நாடாளுமன்றத்தில் கொந்தளித்த டி.ஆர்.பாலு
தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய விவகாரம் கடும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் இந்த குழு அளித்த பரிந்துரையை அடிப்படையாக வைத்து திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவைத் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம் இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தமிழக கட்சிகள் மட்டுமின்றி, மக்களும் நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத ஆளுநர் தமிழகத்தில் இருந்து என்ன பயன்?. மக்களின் கோரிக்கைகளை மதிக்காத ஆளுநர் ஏதற்கு?.
இன்று அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவர் கூறியதை நினைவுகூற விளைகிறேன். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் ஏன் என்று அறிஞர் அண்ணா அன்றே கேட்டார். ஆளுநரின் இந்த செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் உரிமையை பறிக்காதீர்கள் என ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.