முதல்வர் பதவிக்கு ஆபத்தா? மனைவிக்கு மனை வழங்கியதில் சித்தராமையாவுக்கு ஏற்பட்ட சிக்கல்
மூடா ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
மூடா ஊழல்
மூடா எனப்படும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சித்தராமையா, தன்னுடைய மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே இந்த மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
பாஜக பேரணி
இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள பாஜக , சித்தராமையா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மைசூர் நோக்கி பேரணியை நடத்தியது.
முன்னதாக, ஜூலை 26 ம் தேதி, கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட், நீங்கள் ஏன் வழக்கை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க கோரி முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்குப் பதிலளித்த கர்நாடக அமைச்சரவை, ஆளுநர் தனது அரசியல் சாசன அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என குற்றஞ்சாட்டி, முதல்வருக்கு வழங்கப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.
அவசர ஆலோசனை
தற்போது இந்த விவகாரத்தில் முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் தவார் சந்த் கெலாட் அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து நியாமான விசாரணை நடைபெற சித்தராமையா பதவி விலக வேண்டுமென பாஜக எம்பி தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார். இது பொம்மை ஆளுநர் மூலம் மோடி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது இல்லத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மாநில முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.