இனபடுக்கொலை செய்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பாஜக அரசை தமிழர்கள் ஒருநாளும் மன்னிக்கவே மாட்டார்கள் - வைகோ கண்டனம்

srilanka war vaiko genocidal
By Jon Mar 23, 2021 05:42 PM GMT
Report

இனக்கொலை செய்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பாஜக அரசை தமிழர்கள் ஒருநாளும் மன்னிக்கவே மாட்டார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கையில் இனப்படுகொலை நடத்தி, 2009 ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று உலகத் தமிழினம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.

ஐ.நா. மனித உரிமை மன்றம் 2015 இல் சிங்கள இனவாத அரசு நடத்திய படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு மனித உரிமைச் செயல்பாட்டார்களையும் இணைத்துக் கொண்டு இலங்கை அரசு புலனாய்வு நடத்த வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

குற்றவாளியிடமே நீதியை வழங்குமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேட்பது ஒருபோதும் நடைமுறைக்கு வராது என்றும், சிங்கள பேரினவாத அரசின் கொலைக் குற்றத்தை மூடி மறைக்கவும், நீர்த்துப் போகச் செய்யவுமே இது வழிவகுக்கும் என்று நாம் எதிர்த்தோம். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 2021, பிப்ரவரி மாதம் ஐ.நா.

மனித உரிமை தலைமை ஆணையர் அதன் உறுப்பு நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், “இலங்கை அரசு அந்நாட்டு மக்களுக்கு பொது அரசாக செயல்படவில்லை. ஓர் இனச் சார்பாகச் செயல்படுகிறது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் தீர்மானத்தைச் செயல்படுத்தவே இல்லை. இனியும் செயல்படுத்தப்போவது இல்லை. இலங்கையில் நீதித்துறையின் தற்சார்பு சீரழிக்கப்பட்டுவிட்டது. பத்திரிகை, ஊடகங்களின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது.

அங்கு மனித உரிமை அமைப்புகள் நடுநிலையுடன் செயல்பட முடியாது. எனேவ மனித குலத்துக்கு எதிரான இலங்கை அரசின் குற்றங்கள், படுகொலைகள், காணாமல் போனவர்கள் என்று கூறப்பட்டவர்கள் அனைவருக்குமான பொறுப்புக்கூறல் போன்றவற்றை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இலங்கை அரசின் மேற்படி குற்றங்களுக்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும்.

இதற்கான முன்னெடுப்பை ஐ.நா. பொதுப் பேரவையும், பாதுகாப்புக் குழுவும் எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்பட உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் தலைமை ஆணையர் கேட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து மார்ச் 22 ஆம் தேதி, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு தீர்மானம் விவாதத்திற்கு வரப்போகிறது.

இத்தீர்மானத்தை பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மாண்டினிக்ரோ உள்ளிட்ட ஆறு நாடுகள் முன் மொழிந்துள்ளன. இத்தீர்மானம் முழுமையானதாகவோ, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பதற்கான வகையிலோ இல்லை. எனினும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு, மனித உரிமை மீறலுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பு ஆகும். இந்த அரைகுறைத் தீர்மானத்தைக்கூட இந்தியா ஆதரிக்கப் போவதில்லை என்ற செய்திகள் தமிழர்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றன.

47 உறுப்பு நாடுகள் இடம்பெற்றிருக்கும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஈழத் தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த சிங்கள பேரினவாத இனக்கொலை அரசின் மீது கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால், இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெயநாத் கெலம்பகே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்காது;

இலங்கை அரசைத்தான் ஆதரிக்கப்போகிறது என்று கூறியதாக செய்தியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எட்டுக்கோடி தமிழர்களின் இதயக் குமுறலை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழினத்திற்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது. இதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இனபடுக்கொலை செய்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பாஜக அரசை தமிழர்கள் ஒருநாளும் மன்னிக்கவே மாட்டார்கள் - வைகோ கண்டனம் | Government Supporting Genocidal Srilanka Vaiko

இந்திய அரசு, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் நாளை (22.3.2021) முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.