ரோஹிங்யா அகதிகளை இந்திய அரசு நாடு கடத்தக்கூடாது: உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை மியான்மருக்கு நாடு கடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இருந்து ரோஹிங்யா அகதிகளை அந்த நாடு நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது. வங்கதேசத்தில் 10 லட்சத்திற்கு அதிகமானவர்களும் இந்தியாவில் 40,000ற்கு அதிகமான ரோஹிங்யா அகதிகளும் வசித்து வருகின்றனர்.
மியான்மரில் இவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பாஜக அரசு இந்தியாவில் வசித்து வரும் ரோஹிங்யா அகதிகளை கண்டறிந்து மியான்மருக்கு நாடு கடத்துவதில் குறியாக இருக்கிறது.
ஆனால் அதற்கு எதிராக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. மத்திய அரசு அவ்வப்போது சில ரோஹிங்யா அகதிகளை மியான்மருக்கு நாடு கடத்தி வருகிறது. இதற்கிடையே அங்கு ஆட்சியில் இருந்த ஆங் சாங் அரசை தூக்கி எறிந்து ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது. ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக போராடி வரும் மியான்மர் மக்களை இராணுவம் கொன்று குவித்து வருகிறது.
ரோஹிங்யாக்களை நாடு கடத்துவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்கள் அதற்கு தடையும் விதித்துள்ளன. ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்துவதற்கு எதிரான வழக்கு நீண்ட காலமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு அந்த மாநிலத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகளை திடீரென கைது செய்தது.
மேலும் அவர்கள் விரைவில் மியான்மருக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதில் இடைக்கால நிவாரணம் கோரப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது. மேலும் ரோஹிங்யா அகதிகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றிய பிறகே நாடு கடத்த வேண்டும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. அது வரை ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின்போது “ரோஹிங்யா அகதிகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தான் நாடு கடத்துகிறோம்” எனத் தெரிவித்திருந்தது. அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் அமைந்துள்ளது.