முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு அரசுப் பதவி! வலுக்கும் கண்டனம்
தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் மற்றும் தவெக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவர் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், கட்சியின் முக்கிய முடிவுகளில் திரைமறைவில் முக்கியப் பங்காற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
தவெகவின் செய்தித் தொடர்பாளராக ஊடகங்களில் அறியப்பட்ட இவருக்கு, இப்போது நேரடியாகவே அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணையில், ‘தமிழக முதல்வரின் அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார்.
அவர் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும். இதற்கான பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்துத் தனியாக அறிக்கை வெளியிடப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.