தாராளமாக இலங்கைக்கு உதவுங்கள் : இலங்கைக்கு உதவ மத்திய அரசு அனுமதி
தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை இலங்கை மக்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கடந்த 29ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின் , "இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக கூறினார்.
"இன்னலில் சிக்குண்டபோதும், உணவுப்பொருளானாலும் உயிர்காக்கும் மருந்தானாலும் எமக்கு மட்டும் வேண்டாம்; இலங்கை மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுப்புங்கள் எனத் தமிழர் பண்பை வெளிப்படுத்திய இலங்கை மக்களுக்கு
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 29, 2022
1/2 pic.twitter.com/7KwrrFL3YY
முக்கியமாக, 40 ஆயிரம் டன் அரிசி: இதனுடைய ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய், அதேபோல், உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்கள் இதன் மதிப்பு 28 கோடி ரூபாய், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடர் இதன் மதிப்பு 15 கோடி ரூபாய் இவற்றையெல்லாம் இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நாம் வழங்க நினைக்கிறோம்.
இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது ஒன்றிய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும். இலங்கையில் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டதுமே, இந்திய அரசிடம் இதுகுறித்த கோரிக்கையை நான் முன்வைத்தேன்.
அதனைத் தொடர்ந்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டும் நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். அவருக்கும் 15-4-2022 அன்று கடிதம் எழுதி நினைவூட்டியிருக்கிறேன். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை.
ஆனால் அங்கு நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது" என்றார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை மக்களுக்கு உதவுவது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் தூதரகம் மூலம் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் . நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும், அதை வினியோகம் செய்வதற்கும் மத்திய அரசுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒருங்கிணைந்து செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் விரைவில் தமிழக அரசின் உதவிகள், இலங்கையில் அல்லல்படும் மக்களை சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.