அரசு நிலத்தில் தலைவர்களுக்கு சிலை வைக்க கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இச்சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரி, கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். எந்த அவமரியாதையும் அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை.
ஆனால் அரசு நிலம் சிலைகள் அமைக்க பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தியது. மேலும், எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசை நீதிபதிகளை வலியுறுத்தினர்.
அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக அரசு எடுத்த நடவடிக்கை, பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான அறிக்கையுடன், அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.