4 நாள் விடுமுறை...ஆம்னி பேருந்துகளில் ஒரே இரவில் அதிகரித்த கட்டணம் - அதிரடி காட்டிய அமைச்சர்..!
ஆம்னி பேருந்துகளில் கட்டணம் ஒரே இரவில் ரூ.2000 ஆயிரத்தில் இருந்து ரூ.3000 வரை உயர்த்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் சித்திரை முதல் நாளான இன்று அரசு விடுமுறையை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
சென்னையில் இருந்து பயணிகள் சொந்த ஊர்களுக்கு நேற்று இரவு பயணம் மேற்கொண்டனர். இதையடுத்து கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்துநிலையம்,ஆம்னி பேருந்து நிலையம்,எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.
இதனிடையே ஆம்னி பேருந்துகளில் அதிகளவில் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. ஆம்னி பேருந்துகளில் ரூ.2500 முதல் ரூ.3500 வரை கட்டணம் பெறப்படுவதாக தொடர் புகார் சென்றன.
இந்நிலையில் ஆம்னி பேருந்து நிலையத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆம்னி பேருந்து பயணிகளிடம் நீங்கள் எங்க போறீங்க..எவ்வளவு டிக்கெட் என்று கேட்டறிந்தார். அப்போது பேருந்து பயணிகள் தங்களிடம் அதிக கட்டணம் பெறப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் உங்களிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணத்தை திருப்பி தர சொல்வதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.