ஓய்வுபெறும் வயதுக்கான அரசாணைக்கு தடை கோரிய மனு..தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

government retire employee agelimit extend
By Praveen Apr 28, 2021 10:39 AM GMT
Report

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59ல் இருந்து 60 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59ல் இருந்து 60 ஆக உயர்த்தி, தமிழக அரசு, கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை எனவும், அதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்தும் விளக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்தாமல், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் மட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ள நிலையில், 2020-21ம் ஆண்டுகளில் ஓய்வுபெற இருந்த 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தது.