அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை - சென்னையில் நிகழ்ந்த சோகம்
சென்னை மயிலாப்பூரில் அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் கிருஷ்ணாபுரம் 3வது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் என்பவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த புதன்கிழமை பணிமுடிந்த பின்னர் மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். காரில் அங்கு சென்ற மகேஸ்வரன் காரை வீட்டில் விட்டுவிடும்படி டிரைவர கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.
அதேசமயம் மகேஸ்வரனின் நண்பர் வினோத் என்பவர் அவர் வீட்டுக்கு செல்ல டிரைவர் அவரிடம் டாக்டர் மகேஸ்வரன் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள தகவலை கூறியுள்ளார். இதனால் இன்று ஹோட்டலுக்கு சென்ற வினோத் போன் செய்தும் மகேஷ்வரன் எடுக்காததால் ரிஷப்ஷனில் அறை எண்ணைக் கேட்டு அங்குச் சென்று மகேஸ்வரனை கூப்பிட்டு கதவை தட்டியுள்ளார்.
ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர் வினோத், ஓட்டல் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே ஓட்டல் ஊழியர்கள், மாற்றுச் சாவி மூலம் மகேஸ்வரன் தங்கியிருந்த அறை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது படுக்கையில் மகேஸ்வரன் சுய நினைவின்றி கிடந்துள்ளார். அவர் அருகே விஷப்பாட்டிலும், ஊசியும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சிடைந்த நண்பர் வினோத் பரிசோதித்து பார்த்தபோது மகேஸ்வரன் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயப்பேட்டை போலீசார் மகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது மகேஸ்வரன் எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, யாரையும் துன்புறுத்த வேண்டாம் என தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.