3 கோடி ரேஷன் கார்டுகளை ரத்து செய்த மத்திய அரசு: விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம்
நாட்டின் பழங்குடி மக்கள், மற்றும் ஏழைகள் உட்பட, ஆதாருடன் பயோமெட்ரிக் முறையில் இணைக்கப்பட முடியாததால் 3 கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு நீக்கியது. இது மிகவும் தீவிரமான விஷயம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு இது தொடர்பாகக் கூறுகையில், மரணங்கள் பட்டினியினால் ஏற்படவில்லை, வறுமை காரணமல்ல என்றது. இதனையடுத்து, கொய்லி தேவி என்பவர் தொடர்ந்த மனு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன் நடைபெற்றது.
அப்போது மனுதாரார் கொய்லி தேவி சார்பில் ஆஜரானார் வழக்கறிஞர் கொலின் கொன்சால்வெஸ். அதாவது 3 கோடி ரேஷன் அட்டைகளை நீக்கியதால், ரத்து செய்ததால் பட்டினிச்சாவுகள் அதிகரித்துள்ளதாக கோரி இந்த மனு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக ‘3 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருந்தால் அது மிகவும் சீரியஸான விவகாரம்’ என்று உச்ச நீதிமன்றம் அச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மனுதாரர் மேற்கொண்ட மனுவில், “ஆதார் அட்டை, பயோமெட்ரிக் அடையாள நிர்ணய உறுதியை இணைக்க வலியுறுத்தியதால் சுமார் 4 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசுதான் கூறியது. ஆனால் மத்திய அரசோ மிகவும் சாதாரணமாக இவை எல்லாம் போலி ரேஷன் கார்டுகள் என்றது.
ஆனால் உண்மையான காரணம் என்னவெனில் ஆதார் இன்மை, கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் இண்டெர்நெட் இல்லாதது போன்ற சிக்கல்களால் இவ்வளவு ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அந்தந்தக் குடும்பங்களுக்கு இது பற்றி நோட்டீஸ் கூட அனுப்பவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனுதாரரை பிரதிநிதித்துவம் செய்யும் வழக்கறிஞர் கொன்சால்வேஸ் ஆங்கில நாளேடு ஒன்றுக்குக் கூறுகையில், “2 கோடி முதல் 4 கோடி ரேஷன் அட்டைகள் பயனாளர்களுக்கு முன் கூட்டியே நோட்டீஸ் அனுப்பாமல் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை வைத்துதான் மனு செய்யப்பட்டுள்ளது” என்றார். உணவுக்கான உரிமை என்பதை குறியீடாக உணர்த்தும் ரேஷன் அட்டைகளை ஆதார் இல்லை என்பதற்காக நீக்க முடியாது, ரத்து செய்ய முடியாது, என்றார் அவர். நீதிபதி பேசுகையில், “3 கோடி ரேஷன் அட்டைகள் போய்விட்டனவா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் கொன்சால்வேஸ், “ஆமாம்! பட்டினிச்சாவுகள் நிகழ்ந்துள்ளன. 3 கோடி ரேஷன் அட்டைகள் காணாமல் போய் விட்டன, இந்திய ஒன்றியத்தின் அறிவிப்பை நான் காட்ட முடியும்.
இந்த அறிவிப்பு நம் பிரதமருடையது” என்றார் மாநிலங்கள் இந்த மரணங்களை மூடி மறைத்து வயிற்றுப்போக்கு, மலேரியா என்று கூறுகின்றன, ஆனால் உண்மை என்னவெனில் உணவின்மைதான் மரணத்துக்குக் காரணம். ஆதார், பயோமெட்ரிக் போன்ற கொடூரமான நடைமுறைகளால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்களை ஒன்றுமில்லாமல் அடித்துள்ளது. இதனால் ஜார்கண்டு, உத்தரப்பிரதெசம், ஒடிசா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், சத்திஸ்கர், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் பட்டினிச்சாவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளது, என்றார் பின்னர் நீதிபதிகள், “நாங்கள் இந்த வழக்கை பரிசீலிக்க தலைப்படுகிறோம்.
ஏனெனில் மனுதாரர் ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன, ரத்து செய்யப்பட்டுள்ளன என்று புகார் வைத்துள்ளார், இது மிகவும் சீரியசான விவகாரம்” என்றார்கள்.
உணவுக்கான உரிமை விழிப்புணர்வின் பட்டினிக் கண்காணிப்பு அறிக்கையில் இந்தியாவில் பட்டினி நிலவரம் மோசமாக உள்ளது என்றும் உலக பட்டினிக் குறியீடு, 2020-ன் படி 107 நாடுகளில் இந்தியா 94ம் இடத்தில் ‘சீரியஸ் பட்டினிப் பிரிவு நாடுகளில்’ உள்ளது.
இந்நிலையில்தான் போலி ரேஷன் அட்டைகளை ரத்து செய்து தூய்மைப்படுத்தியதாக மத்திய அரசு 3 கோடி ரேஷன் அட்டைகளை நீக்கம் செய்தது தற்போது ‘பட்டினி சாவுகளுக்குக் காரணம்’ என்று உருவெடுத்துள்ளது என்றார்.