நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து : ஓட்டம் பிடித்த பயணிகள்!
நாகை அருகே அரசுப் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்து மயிலாடுதுறையில் இருந்து காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தது. நாகை மாவட்டம், பொறையார் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்காலுக்கு புறப்பட்டது.
அபோது சிறிது தூரம் சென்ற பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. அப்போது பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.