பேருந்து கட்டணம் உயர்கிறது... போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
விரைவில் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்து கட்டண உயரவுள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம், வலயப்பாடி, வேப்பூர் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு பொய்யான தகவல் பரவி வருவதாக தெரிவித்தார். ஆனால் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் அங்கு இயக்கப்படும் நம் மாநில பேருந்துகளிலும் கட்டணத்தை உயர்த்தப்பட வேண்டும் என்பது சட்டரீதியான நடவடிக்கைகளில் ஒன்று.
அதனடிப்படையில் ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது . கட்டண உயர்வு குறித்த பட்டியலை தயார் செய்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அளித்து இருக்கிறார்கள். அதனைக்கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக பலர் சொல்கிறார்கள்.
மேலும் பேருந்துகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதேசமயம் 2000 புதிய பேருந்துகளும், 500 பேட்டரி பேருந்துகளும் ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட உள்ளது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.