விமர்சனமாகும்அரசு நடவடிக்கை.. லட்ச தீவில் நடப்பது என்ன?

By Irumporai May 28, 2021 12:54 PM GMT
Report

இந்தியாவின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் லட்சத்தீவு முக்கியமான ஒரு தீவாக இருக்கிறது.

ஒரு பக்கம் கடல், மற்றொரு புறம் இயற்கை கொஞ்சும் நிலப்பரப்பு, பவளத்தீவுகள் என ஏராளமான இடங்கள் இந்த தீவில் உள்ளது.

மத்தியக் கிழக்குக் கடலில் இந்தியாவின் கடல் வழித்தடங்களைக் கண்காணிக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உகந்த இடமாக லட்சத்தீவுகள் உள்ளன.

இந்தியத் தீபகற்பத்துக்கு வெளியே நாட்டைக் காக்கும் காவல்காரனை போல பரவி நிற்கிறது லட்சத்தீவு. சரி இதெல்லாம் இருக்கட்டும் தற்போது அங்கு பிரச்சினை தான் என்ன?

ஏன் சமூக வலைத்தளங்களில் #savelakshadweep என்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின?இப்போது அரசியல் ரீதியாக ஏன் பேசு பொருளாக உள்ளது? அதற்கான பதிலை காண்போம் .

லட்சத்தீவில் என்ன பிரச்சினை: இந்தியா விடுதலை ஆன பிறகு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி இது யூனியன் பிரதேசமாக அறிவிக்கப் பட்டது லட்சத்தீவு.

இந்திய யூனியன் பிரதேசங்களில் இது மிகச் சிறியது. பவளப்பாறைகள் நிரம்பிய ஒரே தீவுக்கூட்டம். இதன் மொத்தப் பரப்பு 32 சதுர கி.மீதான். இதில், அகத்தி, அன்டோர்ட், பிட்ரா, செட்லட், காட்மாத், கல்பேனி, கவரத்தி மற்றும் கில்டன் ஆகிய தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.

பல தீவுகளில் மனித நடமாட்டமே இல்லை. மொத்த தீவுக்கூட்டமும் ஒரே மாவட்டமாகக் கருதப்படுகிறது. இதன் தலைநகரம் கவரத்தி. நிர்வாக அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

புதிய நிர்வாக அதிகாரியின் கட்டுப்பாடுகள்:

இந்த நிலையில் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த லட்சத்தீவின் நிர்வாகியாக ஐ.பி.எஸ் தினேஷ்வர் ஷர்மா (Dineshwar Sharma) டிசம்பர், 4 தேதி காலமானார்.

ஆகவே மத்திய அரசு புதிய நிர்வாகியாக பிரஃபுல் கோடா பட்டேல் (Praful Khoda Patel) என்பவரை லட்சத்தீவின் நிர்வாகியாக நியமித்தது.

விமர்சனமாகும்அரசு நடவடிக்கை.. லட்ச தீவில் நடப்பது என்ன? | Government Action Is Lakshadweep

இவர் குஜராத் மாநிலத்தின் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது உள்துறை அமைச்சராக இருந்துள்ளார். பின்னர் டையூ டாமன் மற்றும் தாத்ரா நகர் ஹவேலியில் நிர்வாகியாக இருந்துள்ளார்.

இவர் நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர் எடுத்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களை அரசுக்கு எதிராக திருப்புவதாக உள்ளது.

பிரஃபுல் கோடா பட்டேல் உத்தரவுப்படி லட்சத்தீவுக்கு வருவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னால் ஆர்டிபிசிஆர் சோதனையில் நெகடிவ் என வந்தால் லட்சத்தீவிற்குள் வரலாம் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதனால் ஜனவரி வரை கொரோனா தொற்றே இல்லாத தீவாக இருந்த லட்சத்தீவில் தற்போது 5000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறைவாக (சாதாரண)குற்றங்கள் பதியப்பட்டு வந்த லட்சத்தீவில் , தற்போது குண்டாஸ் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதை எல்லாம் விட முக்கியமாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்த தீவில் மாட்டுக்கறிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களில் பணிபுரிந்த சில ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்புமின்றி நீக்கியுள்ளது.

மேலும் லட்சத்தீவை முன்னேற்ற மக்களின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்து அவர்களுக்கு வேறு இடத்தை வழங்கலாம் எனவும், அந்த இடத்தை அரசு தீவின் வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது .

இதற்கு கடும் எதிர்ப்பு மக்களின் மத்தியில் எழுந்து வருகிறது. ஒரு மாவட்டத்தைபோல் இருக்கும் குட்டி தீவில் ரயில்களோ சாலைகளோ எவ்வாறு அமைக்க முடியும் அப்படி அமைத்தால் அது சுற்று சூழலை பாதிக்கும்படி இருக்கும் என சில அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இது மட்டுமல்லாது மதுவுக்கான விற்பனை தடையை அரசு நீக்கியுள்ளது. சுற்றுலாவை பெருக்க செய்த நடவடிக்கை என அரசு தரப்பு கூறுகிறது.

ஆனால் இது அங்கு பெரும் எதிர்ப்பை பெற்றுள்ளது. இப்படியாக ஏகப்பட்ட பிரச்சினைகள் தொடர்வதால் அங்குள்ள மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

குரல் கொடுக்கும் பிரபலங்கள்:

இது போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள்தான் தற்போது பலத்த சர்ச்சையாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தற்போது லட்சத்தீவு காப்பாற்றப் பட வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக டிகர் பிருத்விராஜும் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக டிவிட்டரில் குரலைப் பதிவு செய்திருந்தார்

அதனை பலரும் விமர்சித்து பதிவுகளை எழுத ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட வசவுகளாக மாறிய அந்த பதிவுகளை அடுத்து இப்போது மலையாள திரையுலகினர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட நபர் சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில் ஜனநாயகத்தை குலைக்கவும், கருத்து வேறுபாடு கொண்டவர்களை தண்டிக்கவும் முயல்கிறார்.

ஆகவே தாங்கள் தலையிட்டு புதிய உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

லட்சத்தீவில் பாஜக தங்களுடைய சர்வாதிகார ஆட்சியின் தன்மையை காட்டுகிறது என எதிர்கட்சிகள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், தற்போது நாடு முழுவதும் இந்த பிரச்சனை சமூக வலைத்தளத்தால் தெரிய வந்துள்ளது.

இதனால்தான் சமூக வலைதளத்தை முடக்க எத்தனிக்கிறதா பாஜக என விவாதிக்கின்றனர் இணையவாசிகள்.