இலங்கையில் அமையவுள்ள புதிய அரசு... ராஜபக்சக்களுக்கு இடமில்லை என அறிவிப்பு
இலங்கையில் இளைஞர்களை கொண்ட புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆளும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பியுள்ளது. அங்கு இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது குடும்ப உறுப்பினர்களோடு திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் அங்கு கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீக்கிரையானது.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கிடையில் இலங்கையில் அமலில் உள்ள ஊரடங்கு மே 13 ஆம் தேதி வரை தொடரும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்லலாம் என்றும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய கோட்டாயப ராஜபக்ச இலங்கையில் ராஜபக்சக்கள் இல்லாத இளைஞர்களை கொண்ட புதிய அரசு அமையும் என உறுதியளித்தார். அடுத்த வாரம் புதிய பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சரவை தேர்வு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் புதிய அரசாங்கத்தின் உதவியோடு அதிபரின் அதிகாரங்கள் தொடர்பாக அரசியலமைப்பில் 19 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என கோட்டாபய தெரிவித்துள்ளார். இதன்மூலம் அதிபரிடம் உள்ள அதிகாரங்கள் பறிக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.