கூகுள் நிறுவனத்திலும் சாதியா? கண்டு கொள்ளாத சுந்தர் பிச்சை , நடந்தது என்ன?
கூகுள் நிகழ்வில் தலித் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தேன்மொழி சௌந்தரராஜன் உரையாற்ற சில ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
அமெரிக்காவில் வசித்து வரும் தேன்மொழி சௌந்தரராஜன், ஈகுவாலிட்டி லேப்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.சாதி ரீதியாக பாதிக்கப்படும் தலித்துகளுக்கு தனது தொண்டு நிறுவனத்தின் மூலமாக சட்ட உதவிகளை வழங்கி வருகிறார் தேன்மொழி சௌந்தரராஜன்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கூகுள் நியூஸ் ஊழியர்கள் மத்தியில் தலித்துகளின் வரலாறு தொடர்பான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தேன்மொழி சௌந்தரராஜன் உரை நிகழ்த்த இருந்தார். இதற்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக தேன்மொழி ஒரு இந்து விரோதி என்றும், இந்துக்களுக்கு எதிரானவர் எனவும் நிறுவன உயரதிகாரிகளுக்கு மின்னஞ்சல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தேன்மொழி சௌந்தரராஜன் கலந்துகொள்ள இருந்த கருத்தரங்கை கூகுள் நிறுவனம் ரத்து செய்தது
. இது தொடர்பாக கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையிடமும் தேன்மொழி முறையிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சுந்தர் பிச்சை எந்தவிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்த கூகுள் நியூசின் மூத்த மேலாளர் தனுஜா குப்தா ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூகுள் தலைமைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூகுள் பன்முகத்தன்மையை நிலைநிறுத்தும் முயற்சிகளில் வெற்றிபெற விரும்புகிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு ஆதரவாக போரட்டம் நடைபெற்ற போது கூகுள் அந்த போராட்ட காரர்களுக்கு துணை நின்றது , இந்த நிலையில் தற்போது தலித் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஒரு தொண்டு நிறுவனத் தலைவரின் பேச்சினை மதிக்காமல் கூகுள் அவரின் கருத்தரங்கு உரையினை ரத்து செய்தது, பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது.