கூகிள் மேப்பை நம்பி சென்ற போலீஸ் டீம் - குற்றவாளிகள் என நினைத்து தாக்கிய மக்கள்
கூகிள் மேப்பை நம்பி வேறு மாநிலத்திற்கு சென்ற காவல்துறை குழுவை பொதுமக்கள் சிறை பிடித்துள்ளனர்.
கூகிள் மேப்
கடந்த செவ்வாய்க்கிழமை(07.01.2025) 16 பேர் கொண்ட அஸ்ஸாம் மாநில காவல் துறை குழு ஒன்று டீ எஸ்டேட்டில் பதுங்கியிருந்த குற்றவாளியை பிடிக்க புறப்பட்டுள்ளனர்.
கூகிள் மேப் உதவியுடன் இவர்கள் பயணம் செய்த நிலையில், கூகிள் மேப்பானது, அண்டை மாநிலமான நாகாலாந்தின் மோகோக்சுங் பகுதியில் உள்ள டீ எஸ்டேட்டை அஸ்ஸாமில் உள்ளது போல் காட்டியுள்ளது.
சிறைபிடித்த மக்கள்
இந்த காவல்துறை குழுவில் 3 பேர் தவிர்த்து மற்ற 13 பேரும் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆயுதங்களுடன் சாதாரண உடையில் இருந்த காவல்துறையினரை பார்த்த உள்ளூர் வாசிகள், அவர்களை தாக்கி சிறைபிடித்துள்ளனர். இதில் ஒரு காவலர் காயமடைந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த அஸ்ஸாமிலுள்ள காவல்துறையினர், உடனடியாக மோகோக்சுங் காவல்துறை கண்காணிப்பாளருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, அங்கு வந்த நாகலாந்து காவல்துறையினர், சிறைபிடிக்கப்பட்டிருந்த அஸ்ஸாம் அதிகாரிகளை மீட்டுச் சென்றனர்.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, 3 காவலர்கள் தவிர்த்து மற்ற காவலர்கள் சாதாரண உடையில் இருந்ததால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர். நாகலாந்து காவல்துறையினர் வந்த பிறகு முதலில் 5 காவலர்களை விடுவித்துவிட்டு மறு நாள் காலையில் மீதமுள்ள 11 பேரை உள்ளூர்வாசிகள் விடுவித்தனர் என கூறினார்.