இனி உங்களுக்கும் வேலை இல்லை :ரோபோட்களையும் பணிநீக்கம் செய்த கூகிள்
உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் ஒரு கட்டம் மேலே போய் ரோபோட்களை பணிநீக்கம் செய்துள்ளது கூகிள் நிறுவனம்.
கூகிள் வேலை நீக்கம்
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பிறகு நிலவி வரும் பொருளாதார மந்தநிலை மற்றும் பல்வேறு துறைகளில் கால்பதித்துள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவற்றால் பலர் வேலையை இழந்து வருகின்றனர்.

கூகிள், மைக்ரோசாப்ட் என ஐடி நிறுவனங்கள் தொடங்கி பல ஐடி, பொருளாதாரம், கட்டிடகலை, மனிதவள நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. உலகம் முழுவதும் தற்போது வரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இவ்வாறாக திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரோபோக்கள் வேலை நீக்கம்
ஏற்கனவே தனது பணியாளர்களில் பலரை வேலையை விட்டு தூக்கிய கூகிள் நிறுவனம் இன்னும் ஒருபடி மேலே சென்று ரோபோட்டுகளையே வேலையை விட்டு தூக்கியுள்ளது. கூகிள் நிறுவனத்தில் கதவை திறந்து விட, தளத்தை சுத்தம் செய்ய, குப்பை அள்ள, கேண்டீனில் பணிவிடைகள் செய்ய என பல பயன்பாடுகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் அலுவலக செலவுகளை குறைக்கும் வண்ணம் உணவு டேபிளை சுத்தம் செய்யவும், குப்பைகளை அகற்றவும், கதவுகளை திறக்கவும் பயிற்சி பெற்றிருந்த ரோபோக்கள் அந்த பணியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்க நடவடிக்கை மனிதர்களில் தொடங்கி ரோபோக்கள் வரை நீண்டிருப்பது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.