3 ஆயிரம் ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள், காரணம் என்ன?
கூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு வகையான செயலிகளையும், புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் 3 ஆயிரத்து 500 ஆடுகளுக்கு கூகுள் நிறுவனம் வேலை வழங்கி உள்ளது.
3, 500 ஆடுகளுக்கு வேலை
அந்த வகையில் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அலுவலக தோட்டத்தில் உள்ள புல்தரைகளை சீராக வைத்துக் கொள்ள சுமார் 3, 500 ஆடுகளை வாடகைக்கு வாங்கியுள்ளது. பெட்ரோல், டீசலில் இயங்கும் எந்திரங்களை பயன்படுத்தி தோட்டப் பணிகளைச் செய்வதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கும் வகையில் ஆடுகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டு வாக்கில், இப்படி ஆடு போன்ற கால்நடைகளை வாடகைக்கு விடும் பல நிறுவனங்கள் அமெரிக்காவில் இயங்கி வருவதாக ஃபோர்ஸ் பத்திரிகை தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டது.
இயற்கை முறையில் புதிய யுக்தி
கூகுளைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகர நிர்வாகமும் தன் நகர்புற பூங்காக்களில் அதிகப்படியாக வளரும் புற்களைக் கட்டுப்படுத்த அல்லது புல் தரைகளை நிர்வகிக்க செம்மறி ஆடுகளைக் களமிறக்கியது.
பொதுவாகவே ஆடுகள், மனிதர்கள் தங்கள் தட்டில் உள்ள உணவை முழுமையாக வழித்துச் சாப்பிடுவது போல சுத்தமாக புற்களை சாப்பிடக் கூடியவை.
ஆனால் செம்மறி ஆடுகளோ பச்சைப் பசேலென இருக்கும் இடங்கள், புற்கள் அதிகமாக மண்டிக் கிடக்கும் புதர்கள் போன்ற இடங்களில் மட்டுமே சாப்பிடும் என யூரோ நியூஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உண்மையிலேயே ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் ஒரு இயற்கையான தோட்டப் பணியாளர்கள், இயற்கையின் பாதுகாவலர்கள் என்றால் அது மிகை இல்லை.